பயணத்திற்கு முன் டிப்ஸ் கேட்கத் தடை... வாகன முன்பதிவு செயலிகளுக்கு கடும் உத்தரவு!
ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ போன்ற வாகன முன்பதிவு செயலிகளில், பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே டிப்ஸ் கேட்கும் அம்சத்தை உடனடியாக நீக்க வேண்டும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய நடைமுறை மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகப் பயணிகள் கட்டாயப்படுத்தப்படுவதைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிப்ஸ் கொடுத்தால் உடனே வாகனம் கிடைக்கும் என எந்தச் செயலிலும் பயணிகளை வற்புறுத்தக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற முறைகளால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அமைச்சகம் உடனடியாகச் செயல்பட்டு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பயணிகளின் நலனைக் காக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. செயலிகள் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற விதிமீறல்கள் நடக்காமல் இருக்கத் துறைசார்ந்த அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
