சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு... களைகட்டும் 17-வது சட்டப்பேரவை!
தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர், தற்காலிகப் பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் இன்று (மே 11) காலை உற்சாகமாகத் தொடங்கியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒருவராகப் பேரவைக்கு வந்து, சட்டமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.
அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். தற்காலிகச் சபாநாயகர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க, அவர் தனது உறுதிமொழியை வாசித்தார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வரிசைகளில் புதிய உறுப்பினர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பதவியேற்று வருவதால், கோட்டை வளாகமே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்குப் பிறகு நடக்கும் முதல் பதவியேற்பு விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர்களும் முதல்முறையாக அவைக்கு வந்து பதவியேற்று வருகின்றனர். உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்ற பிறகு, நாளை (மே 12) முறைப்படி சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சரிசமமான பலத்துடன் அவையில் அமர்ந்திருப்பதால், இந்த 17-வது சட்டமன்றத்தின் ஒவ்வொரு நகர்வும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
