”வாக்குறுதிப்படி தங்க மோதிரம் திட்டம் இல்லை” - உதயநிதி விமர்சனம்!

 
உதயநிதி விஜய்

தவெக அரசு தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய் மாமன் முறையில் தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் தேர்தல் பிரசாரத்தில் தவெக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், 'அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்' என நிபந்தனை விதித்து திட்டத்தின் சுருக்கத்தை மாற்றியுள்ளனர்" எனக் குற்றம் சாட்டினார். அனைவருக்கும் சேர வேண்டிய திட்டங்களுக்கு நிபந்தனைகளை விதிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய அளவில் பல துறைகளில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாகப் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியதைக் குறிப்பிட்ட உதயநிதி, "நாங்கள் ஆட்சியில் இருந்தபோது செய்த சாதனைகளையும், ஏற்படுத்திய வளர்ச்சியையும் ஒத்துக் கொண்டதற்காக நிதியமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

முந்தைய ஆட்சியாளர்களின் கடன் சுமைகளைச் சுட்டிக்காட்டி தவெக அரசு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது என்றும் விமர்சித்துப் பேசினார்.