"உதயநிதிக்கு நேர்மையும் இல்லை... துணிச்சலும் இல்லை... 32 துறைகளை உதயநிதியும் சபரீசனும் சரி பாதி வசூல்" - ஆதவ் அர்ஜுனா பகிரங்கக் குற்றச்சாட்டு!
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளும்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே நாளுக்கு நாள் அரசியல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அதிரடியான மற்றும் பகிரங்கமான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் இமாலய ஊழல் மற்றும் துறை ரீதியான முறைகேடுகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டார்: "முந்தைய திமுக ஆட்சியில் மொத்தம் உள்ள 32 அரசுத் துறைகளைத் தலா 16 துறைகள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் தங்களுக்குள் சரிபாதியாகப் பிரித்துக் கொண்டனர்.
#JUSTIN || தி.மு.க. ஆட்சியில் 32 துறைகளில் 16 துறைகளில் சபரீசனுக்கு வசூல் | #AadhavArjuna | #DMK | #Tamilnadu | #Sabareesan | #UdhayanidhiStalin | #PolimerNews pic.twitter.com/F5dix2ynMy
— Polimer News (@polimernews) June 25, 2026
அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கின்படி வசூல் செய்து இவர்களிடம் கொண்டு போய் ஒப்படைத்தனர். கட்சி நிதி, குடும்ப நிதி என்றாலே அது திமுக தான் என்பது அனைவருக்கும் தெரிந்த வெளிச்சம்" என்று சாடினார். இதற்கு உதாரணமாய், முந்தைய ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளிகளின் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக மட்டுமே ஒவ்வொரு பள்ளியிடமிருந்தும் தலா ரூ.25 லட்சம் வரை நிதி என்ற பெயரில் கட்டாய வசூல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நடந்து கொள்ளும் விதம் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் அணுகுமுறை குறித்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்தார். "சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியையும் மீறி கேலி செய்வதையும், ஒருமையில் பேசுவதையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முதலமைச்சர் பேசவில்லை என்று திமுகவினர் திட்டமிட்டு ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஆனால், அவையில் அனைவரின் பேச்சையும் உள்வாங்கி, குறிப்பெடுத்து இறுதியாகப் பதிலளிப்பதுதான் மரபு."
எந்தவொரு முதலமைச்சருக்கும் இல்லாத துணிச்சலும் நேர்மையும் முதலமைச்சர் விஜய்க்கு இருக்கிறது. அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காகவே அவர் சட்டமன்ற நிகழ்வுகளைத் தற்பொழுது முழுமையாக நேரலை செய்து வருகிறார். சட்டமன்றத்தில் பேசாமல் உதயநிதி ஸ்டாலின் வெளிநடப்பு செய்ததை விமர்சித்த அமைச்சர், "கட்சி நிதி, குடும்ப நிதி குறித்துப் பேசுவதற்கு உதயநிதிக்கு நேர்மையும் துணிச்சலும் இல்லை. அவையை விட்டு வெளியேறி செய்தியாளர்களிடம் பேசியதை, அவர் அவைக்குள்ளேயே பேசியிருக்கலாமே?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கடந்த 4 நாட்களாகச் சட்டமன்றத்தில் நடந்த உண்மைகளை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் பார்க்க வேண்டும் என்றும், திமுகவின் பண்ணையார்தனமான அரசியலுக்குப் பயப்படாமல் தவெக மக்கள் நல அரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
