ஸ்டாலின் முடிவால் உதயநிதி அதிர்ச்சி.. திமுகவில் உட்கட்சிப் பூசல்!
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவிற்குள் நிலவி வரும் உட்கட்சி விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த ஒரு முக்கிய முடிவால், அவரது மகனும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடும் அதிருப்தியடைந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் இருந்து பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன.
மாமன்றக் கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா "மக்கள் தவெகவுக்கு வாக்களித்தற்காக வருந்துகிறார்கள்" என்று பிரசாரம் செய்த அதே நாளில், திமுகவின் உள்வீட்டு மோதல்களும் தீவிரமடைந்துள்ளன.
தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியவும், உள்ளடி வேலைகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணவும் கட்சித் தலைமை சார்பில் ஒரு பிரத்யேக 'தோல்வி ஆய்வுக்குழு' அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வாரியாகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ரகசியமாகப் புகார்களைப் பெற்று, ஒரு விரிவான அறிக்கையை மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், கட்சியின் தோல்விக்குக் காரணமாக இருந்த மற்றும் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய சில முக்கியப் புள்ளிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மீது தட்டாமல்' நடவடிக்கை' எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதைய அரசியல் சூழலில் கட்சியில் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாகத் தெரிகிறது.
தேர்தல் தோல்வியால் ஏற்கனவே கட்சி சோர்வடைந்துள்ள நிலையில், இப்போது முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அது கட்சியில் மேலும் பிளவையும், தவெக அரசுக்கு சாதகமான சூழலையும் உருவாக்கிவிடும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் ஸ்டாலின் இந்த 'மன்னித்து மறப்போம்' கார்டை கையில் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலினின் இந்த மென்மையான அணுகுமுறை, கட்சியைத் தீவிரமாக மறுசீரமைப்பு செய்ய நினைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்குப் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்துத் தனது தந்தையும் கட்சித் தலைவருமான ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் நேரடியாகவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. "தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பிறகு எதற்காக இவ்வளவு பெரிய ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டும்? தவறு செய்தவர்களைத் தண்டிக்காவிட்டால், களத்தில் உண்மையாக உழைத்த அடிமட்டத் தொண்டர்களின் கருத்துகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?" என்று உதயநிதி காட்டமாகக் கேள்வி எழுப்பியதாக அறிவாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
