“உதயநிதி கோமாளித்தனத்தை கைவிட வேண்டும்; அவருக்கு Gen Z-னா என்னன்னு கூட தெரியல” - அமைச்சர் நிர்மல்குமார்

 
தவெக நிர்மல்குமார்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேகதாது விவகாரம் மற்றும் நீட் தேர்வுப் போராட்டங்கள் குறித்து அவர் பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து நிர்மல்குமார் கூறுகையில், "உதயநிதி தனது கோமாளித்தனமான செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவருக்கு 'Gen Z' என்றால் என்னவென்றே தெரியவில்லை. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில், இளைஞர்கள் மத்தியில் ரூ.200 பணம் கொடுத்து 'Gen Z DMK' தொண்டர்களைத் தான் உட்கார வைத்திருந்தார்கள்."

 நிர்மல்குமார்

சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான அமைதியான போராட்டத்தில் புகுந்து, திமுகவினரே திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர். 'Gen Z DMK' என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உதயநிதி இனிமேலும் கோமாளித்தனம் செய்யக்கூடாது. திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலினுக்குத் தகுதி இருக்கிறதா என்பதை அவர் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

"திமுகவிற்கு தலைமை தாங்கும் தகுதி யாருக்கு இருக்கிறது? கனிமொழிக்கா அல்லது உதயநிதிக்கா? என அக்கட்சிக்குள் ஒரு வாக்கெடுப்பு நடத்த திமுக தலைமை தயாரா?" என சவால் விடுத்தார்.

நிர்மல்குமார்

மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசிய அவர்,  மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் நிச்சயம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பார். இரு மாநிலப் பிரச்சினையை நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினாலே சுமூகத் தீர்வு கிடைக்கும். முதலமைச்சரின் கர்நாடகப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்றார்.