விளையாட்டு வீரர்களுக்கு ரூ.28.93 லட்சம் நிதியுதவி - உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார்!

 
உதயநிதி நிதியுதவி விளையாட்டு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சாதனை படைத்த மற்றும் வளர்ந்து வரும் 35 விளையாட்டு வீரர்களுக்கு இன்று நிதியுதவி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

35 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் ரூ.28.93 லட்சம் மதிப்பிலான காசோலைகள் மற்றும் நவீன விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச பாரா கிரிக்கெட் வீரர் ஆ.சண்முகத்திற்கு ரூ.1.28 லட்சம் மதிப்பிலான பிரத்யேக உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு நிலை விளையாட்டு விடுதியைச் சேர்ந்த ஆகாஷ் ராஜ் மற்றும் ஈஸ்வர் மூர்த்தி ஆகியோருக்குத் தலா ரூ.45 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன. வாள்வீச்சு வீராங்கனை தர்ஷினி மற்றும் நீச்சல் வீராங்கனை ஹர்ஷா ஆகியோருக்குத் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.

உதயநிதி ஸ்டாலின்

விளையாட்டு வீரர்களின் பொருளாதாரச் சூழல் அவர்களது வெற்றிக்குத் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் இத்தகைய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்குத் தேவையான நவீன கருவிகள் மற்றும் பயணச் செலவுகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

"தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழ வேண்டும் என்பதே அரசின் இலக்கு" என்று இந்த நிகழ்ச்சியின் போது உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாகத் தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயரிய ஊக்கத்தொகைகளைத் தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.