“முதல்வர் ஆய்வு செய்த பிறகும் காவல் நிலைய மரணங்கள் தொடர்கிறது” - உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

 
உதயநிதி

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய் காவல் நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்த பிறகும், மாநிலத்தில் காவல் நிலைய மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

லாரி தீப்பிடித்து எரிந்தது தொடர்பாகப் புகார் அளிக்கச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன், செக்கானூரணி காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசையும் காவல்துறையின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்: புகார் அளித்த பாலகிருஷ்ணனைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்தது ஏன்?

மதுரை செக்கானூரணி காவல் நிலையம் லாக்-அப் டெத்

விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்குச் சென்ற நபர், அங்குள்ள கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார் என்றால், அவருக்கு அந்த அளவுக்கு என்ன நெருக்கடி கொடுக்கப்பட்டது?

உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடலைக் குடும்பத்தினருக்குக் கூடக் காட்டாமல், அவசர அவசரமாகப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்; இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்று விட்டார்களா?

மதுரைச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தை விமர்சித்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டம் முறையாக வழங்கப்படவில்லை எனக் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்ற பெண் ஒருவர், காவல் நிலைய வளாகத்திலேயே தீக்குளித்த சம்பவத்திலும் காரணமானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவரது உறவினர்கள் போராடி வருகின்றனர்.

மதுரை செக்கானூரணி காவல் நிலையம்

காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் விஜய், மதுரை மக்களின் இந்தக் கேள்விகளுக்கு உரியப் பதிலளிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், சினிமா பாணியில் வசனங்கள் பேசுவதைத் தவிர்த்து, தனது துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்றுச் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் சாடியுள்ளார்.

செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மரணம் குறித்து எவ்விதப் பாரபட்சமும் இன்றி முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இம்மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதைத் தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.