ஆக.3ல் தஞ்சையில் திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின்!

 
உதயநிதி

விவசாயிகளுக்குத் துரோகம் இழைப்பதாகக் கூறித் தமிழக அரசைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சை மாநகரில் திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவரின் வழிகாட்டுதலின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டு, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பயிர்க்கடன் தள்ளுபடியில் நடைபெற்றுள்ள மோசடிகள் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காத்து வேடிக்கை பார்ப்பதாகச் சாடியுள்ளார். ஜூன் 12-ஆம் தேதி குறித்த காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கத் தவறியது, காவிரிப் பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுப்பது மற்றும் கர்நாடக முதல்வரைச் சந்திப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது என அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

உதயநிதி

தமிழ்நாட்டு விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சை மாநகரில் ஆகஸ்ட் 3 அன்று திமுக சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

"விவசாயிகளுக்கு எதிரான போக்கைக் கொண்டிருக்கும் இந்த அரசுக்குத் தக்க பாடம் புகட்டும் வகையில் தஞ்சையில் ஒன்று திரள்வோம்" எனத் தனது பதிவில் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.