யுஜிசி நெட் தேர்வில் குளறுபடிகள்... 3 பாடங்களுக்கு மறுதேர்வு - NTA தேர்வு முகமை அறிவிப்பு!

 
யுஜிசி நெட்  UGC NET தேர்வு

தேசிய தேர்வு முகமை நடத்திய யுஜிசி நெட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சோஷியாலஜி ஆகிய 3 பாடங்களுக்கு மட்டும் செப்டம்பர் மாதத்தில் மறுதேர்வு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 22 முதல் 30-ஆம் தேதி வரை மொத்தம் 87 பாடங்களுக்கு நெட் தேர்வுகள் நடைபெற்றன. அதில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சோஷியாலஜி ஆகிய பாடங்களுக்கான வினாத்தாளில் தவறான மொழிபெயர்ப்பு, எழுத்துப் பிழைகள் மற்றும் ஒரே கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது போன்ற தவறுகள் கண்டறியப்பட்டதால் இப்பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி நெட் தேர்வு

செப்டம்பர் 9ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை ஆங்கிலப் பாடத்திற்கும், மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வணிகவியல் பாடத்திற்கும் மறுதேர்வு நடைபெறும். செப்டம்பர் 10ம் தேதி சோஷியாலஜி பாடத்திற்கான மறுதேர்வு நடைபெறும். இந்த மறுதேர்வெழுத உள்ள மாணவர்களிடம் கூடுதல் தேர்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

தேர்வு மையம் மற்றும் ஹால் டிக்கெட் தொடர்பான விவரங்கள் விரைவில் NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். பிற 84 பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்.

கொரோனா எதிரொலி!யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வுகள் ஒத்தி வைப்பு!

இந்த 3 பாடங்களுக்கான மறுதேர்வால் ஆராய்ச்சி உதவித்தொகை ஒதுக்கீடு மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என தேசிய தேர்வு முகமை உறுதி அளித்துள்ளது.