ஓட்டல் கழிவுத் தொட்டி சுத்தம் செய்தபோது விபரீதம்… மூச்சுத் திணறி 4 ஊழியர்கள் பலி... அதிர்ச்சி வீடியோ!

 
மருத்துவமனை

 

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஓட்டலில் கழிவுகளைச் சேகரிக்கும் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைக் காப்பாற்ற உள்ளே சென்ற மேலும் 2 பேருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உஜ்ஜைன் - தேவாஸ் சாலையில் உள்ள ஸ்ரீ கங்கா ஓட்டலில் சனிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்தது. ஓட்டல் வளாகத்தில் அமைந்திருந்த கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக முதலில் 2 பேர் உள்ளே இறங்கியுள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாக வெளியே வராததால், அவர்களை மீட்பதற்காக மேலும் 2 பேர் உள்ளே சென்றுள்ளனர். ஆனால், அவர்களும் தொட்டிக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து வந்த மாதவ் நகர் போலீசார், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி கட்டர் இயந்திரம் மூலம் தொட்டியின் பகுதியை வெட்டி 4 பேரையும் மீட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்திருந்தனர்.

அவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் 2 பேருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீட்புப் பணியின்போது காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் காயமடைந்தார்.

கழிவுத் தொட்டியில் இருந்த வாயு அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்