இங்கிலாந்து அமைச்சரவை மாற்றம்... 3 இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கியப் பொறுப்புகள்!
இங்கிலாந்தில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அரசுப் பதவிகள் மற்றும் அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முக்கியப் பொறுப்பு: பீகாரின் முசாபர்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலாளர் கட்சி எம்.பி. கனிஷ்கா நாராயண், இங்கிலாந்தின் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பணிகள்: வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்களுடன் இணைந்து நாட்டின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கொள்கைகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சிப் பணிகளை இவர் முன்னெடுப்பார்.

சவுத்தாம்ப்டன் டெஸ்ட் தொகுதியின் எம்.பி.யான சத்வீர் கவுர், சமத்துவத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது, பாலினச் சமத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் திட்டங்களை இவர் கவனிப்பார். ஹடர்ஸ்ஃபீல்ட் தொகுதியின் எம்.பி.யான ஹர்பிரீத் உப்பல், தொழிலாளர் கட்சியின் உதவிக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் கட்சியின் விதிமுறைகள் மற்றும் உறுப்பினர்களின் வருகையை ஒருங்கிணைக்கும் பணிகளில் இவர் ஈடுபடுவார்.
