கிரிமியா பாலத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல்… ஒரே இரவில் 1,336 டிரோன்கள் வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தகவல்!
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், கருங்கடல் பகுதியில் ரஷ்யாவையும் கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் கிரிமியா பாலம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு (நவம்பர் 15) தொடங்கி இன்று அதிகாலை வரை ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் உக்ரைன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஒரே இரவில் 1,336 உக்ரைன் டிரோன்களை தங்களது வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்ததாகத் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பல்வேறு மாகாணங்கள், கிரிமியா மற்றும் கருங்கடல், அசோவ் கடல் பகுதிகளில் டிரோன்கள் வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கிரிமியா பகுதியின் ரஷ்ய ஆதரவு நிர்வாகத் தலைவர் செர்கெய் அக்சியோனோவ், கிரிமியா பாலம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாலத்தில் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் பாலத்திற்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏதும் இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாகவும் ரஷ்ய தரப்பில் கூறப்பட்டுள்ளது. சேதங்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்றன.ஒரே இரவில் 1,336 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக ரஷ்யா வெளியிட்டுள்ள தகவலை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தத் தாக்குதல் தொடர்பாக உக்ரைன் தரப்பின் விரிவான விளக்கம் வெளியாகவில்லை.
