1000 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல்... தீப்பிடித்து எரியும் ரஷ்ய எண்ணெய் ஆலைகள்!
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் படைகள் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நேற்று தீவிரப்படுத்தியுள்ளன.
ரஷ்ய நாட்டின் முக்கியப் பகுதிகளை இலக்காகக் கொண்டு உக்ரைன் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவிப் பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள ரஷியாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையம் கடுமையாகத் தாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த ஏற்றுமதி முனையமும் அதற்கு அருகில் அமைந்திருந்த ருச்சி எண்ணெய் கிடங்கும் பலத்த தீப்பற்றி எரியத் தொடங்கின.

இந்த வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஷியாவின் பிரபல ஓசோன் நிறுவனத்திற்குச் சொந்தமான பிரம்மாண்ட தளவாட மையம் மற்றும் முக்கியத் தரவு மையம் ஆகியவையும் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளன. அதேவேளையில், உக்ரைன் படைகளால் ஏவப்பட்ட 1,015 ட்ரோன்களைத் தங்கள் வான் பாதுகாப்பு மண்டலம் மூலம் வெற்றிகரமாகத் தாக்கி அழித்துவிட்டதாக ரஷிய ராணுவ அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உக்ரைனின் ஜபோரிஷ்சியா பகுதியில் ரஷியப் படைகள் நடத்திய இரண்டு கட்டத் தாக்குதல்களில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள், பதினெட்டு கார்கள் மற்றும் ஒரு கல்வி நிறுவனம் ஆகியவை கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், ரஷியப் படைகள் உக்ரைனின் இயற்கை மற்றும் எண்ணெய் வளங்களைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
