ரஷ்யாவை இணைக்கும் கிரிமியா பாலம் மீது உக்ரைன் தாக்குதல்... ஒரே இரவில் 1,336 டிரோன்களை ஏவிப் பதிலடி!

 
ரஷ்யா கிரிமியா பாலம் உக்ரைன்

உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷியாவையும் கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் மிக முக்கியமான கெர்ச் பாலம் மீது உக்ரைன் படைகள் மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளன. போர் தொடங்கிய பிறகு உக்ரைன் நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

ஒரே இரவில் ரஷியாவின் பல்வேறு பிராந்தியங்கள், மாஸ்கோ மற்றும் கிரிமியா பகுதிகளைக் குறிவைத்து உக்ரைன் சுமார் 1,336 டிரோன்களை ஏவியுள்ளது. இதில் சுமார் 600 டிரோன்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி வந்தபோது இடைமறித்து அழிக்கப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,336 டிரோன்களையும் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் குண்டுவீச்சு

ரஷியாவால் நியமிக்கப்பட்ட கிரிமியாவின் ஆளுநர் செர்ஜி அக்சியோனவ், பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். இத்தாக்குதலால் பாலத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இருபுறமும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பாலத்திற்குச் சிறிய அளவிலான சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு போக்குவரத்து தொடர்வதாகவும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

கிரிமியா பாலம் மட்டுமின்றி, ரஷியாவின் முக்கிய பெட்ரோ கெமிக்கல் ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ராணுவத் தளவாட உற்பத்தி மையம் ஆகியவற்றின் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன்

உக்ரைன் நகரங்கள் மற்றும் மின் கட்டமைப்புகள் மீது ரஷியா நடத்தி வரும் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2022 அக்டோபரில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி மூலமும், 2023 ஜூலையில் கடல்வழி டிரோன்கள் மூலமும் இந்தப் பாலம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முத்தரப்பு மாநாட்டுக்கு முன்னதாகப் பதற்றம்: சீனாவின் சென்சென் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கும் முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், அதற்குச் சில நாட்களுக்கு முன்பாக இந்தத் தீவிரத் தாக்குதல் அரங்கேறியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.