ரஷ்யாவின் அதிநவீனப் போர்க்கப்பல் மூழ்கடிப்பு - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி!

 
ட்ரம்ப் ஜெலன்ஸ்கி

லிபியா கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்த ரஷியக் கடற்படையின் அதிநவீனப் போர்க்கப்பலைத் தாங்கள் தாக்கி மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 7 கடற்படை டிரோன்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் துல்லியத் தாக்குதலில், 2023-ஆம் ஆண்டு ரஷியக் கடற்படையில் இணைக்கப்பட்ட ‘மெர்குரி’ என்ற புதிய ரகப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெங்காசி துறைமுகத்தில் நின்ற கப்பல் மீது தாக்குதல்: கிழக்கு லிபியாவின் பெங்காசி கடற்படைத் தளத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நின்றிருந்த ரஷியாவின் புதிய ரக ஏவுகணைப் போர்க்கப்பலான ‘மெர்குரி’ மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தின.

ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் தாக்குதல்

உக்ரைனிலேயே தயாரிக்கப்பட்ட 7 அதிநவீனக் கடற்படை டிரோன்களைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க ரஷியப் படைகள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், டிரோன்கள் கப்பலைத் தாக்கியதில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தைத் தொடர்ந்து கப்பல் கடலில் கவிழ்ந்து மூழ்கியது.

மூழ்கடிக்கப்பட்ட ‘மெர்குரி’ போர்க்கப்பலில் இருந்த ரஷியாவின் Ka-27 ரகப் போர் ஹெலிகாப்டரும் இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், லிபியா கடற்பகுதியில் ரஷியாவுக்காக ஆயுதங்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் ‘எம்.வி. அங்காரா’ என்ற சரக்குக் கப்பலும் உக்ரைன் டிரோன் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

ரேடாரில் சிக்காத தொழில்நுட்பம் கொண்டதாக ரஷியாவால் பெருமையுடன் பேசப்பட்ட 2023-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நவீனப் போர்க்கப்பல், ஐரோப்பியப் போர் முனையைத் தாண்டி மத்தியதரைக் கடல் பகுதியில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ட்ரம்ப்

இந்த தாக்குதல் குறித்துப் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “குறிப்பிட்ட கடற்பகுதிகளில் எங்களது நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறோம். ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம்; உக்ரைனின் சொந்த ஆயுதங்களைத் தொடர்ந்து மேம்படுத்துவோம்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஐரோப்பாவிற்கு வெளியே லிபியா கடற்பகுதியில் ரஷியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம், ரஷியா – உக்ரைன் போர் புதிய கடற்பரப்புகளுக்கு விரிவடைந்துள்ளதைக் காட்டுகிறது. இந்தச் சம்பவம் குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் லிபியா தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, உக்ரைனின் கீவ் மற்றும் ஜபோரிஜியா பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.