2 ஆம்னி பஸ்கள் பயங்கர மோதல்! ஒருவர் கால் விரல் துண்டிப்பு; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் அடுத்தடுத்து சென்ற 2 ஆம்னி பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதில் ஒருவரின் கால் விரல் துண்டானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஆலங்குளம் நோக்கி சென்ற சொகுசு ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் முன்னால் மற்றொரு ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

முதற்கட்ட தகவலின்படி, முன்னால் சென்ற பேருந்து திடீரென பிரேக் போட்ட நிலையில், பின்னால் வந்த பேருந்தால் உடனடியாக கட்டுப்படுத்த முடியாமல் அதன் மீது மோதியதாக தெரிகிறது.
இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு கால் விரல் துண்டானதாக கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து காரணமாக புறவழிச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய பேருந்துகளை அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
