அமெரிக்காவின் மரண தண்டனை நேரலை ஒளிபரப்புக்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கடும் எதிர்ப்பு!

 
அமெரிக்கா மரண தண்டனை

அமெரிக்க ராணுவத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட உள்ள மரண தண்டனையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ள விவகாரம் உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் போர்ட் ஹூட் ராணுவ தளத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு அரங்கேறிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். இக்குற்றத்திற்காகத் முன்னாள் ராணுவ மேஜர் நிடால் ஹசனுக்கு வரும் டிசம்பர் 3-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் மரண தண்டனை இதுவாகும்.

ஐநா

இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பொதுமக்கள் அனைவரும் நேரில் பார்க்கும் வகையில் இணையம் வாயிலாக நேரலையில் ஒளிபரப்ப அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம், ஒரு மரண தண்டனையை இவ்வாறு பகிரங்கமாக நேரலையில் ஒளிபரப்புவது கொடூரமான, மனிதத்தன்மையற்ற அல்லது இழிவான தண்டனை முறைக்கு இணையானது என்றும், இது சித்திரவதைக்கெதிரான தடைகளை மீறும் செயல் என எச்சரித்துள்ளது.