விஜய்க்கு 6 மாத காலம் நிபந்தனையற்ற ஆதரவு... அனைத்து கட்சிகளுக்கும் பாஜக செய்தித் தொடர்பாளர் வேண்டுகோள்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் எவ்வித அழுத்தமுமின்றி சுதந்திரமாக ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, அடுத்த 6 மாத காலத்திற்குத் தவெக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் தீர்ப்பை அனைத்துக் கட்சிகளும் மதிக்க வேண்டும் என்று கூறிய அவர், தமிழகத்தில் குதிரை பேர அரசியலை அறவே தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். விஜய்யின் தலைமையிலான புதிய அரசுக்குத் தேவையான ஆதரவைத் திரட்டும் வகையில், பிரதமர் மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவைப் பெற்றுத் தர உள்ளதாகவும் பிரசாத் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நலன் கருதி ஒரு நிலையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 108 இடங்களைப் பெற்றுள்ள விஜய், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகி வரும் வேளையில், பாஜக தரப்பிலிருந்து வந்துள்ள இந்த ஆதரவு அறிக்கை தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
