நிறைவேறாத கோரிக்கைகள்.. போராட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, இன்று ஜூலை 24-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டத்தை விரிவுபடுத்துவதாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) அறிவித்துள்ளது.
மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையிலும், அரசுத் தரப்பில் உரிய தீர்வுகள் எட்டப்படாத சூழலிலும் இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது. "ஒவ்வொரு மாவட்டம், ஒரு நாள், ஒரு கோரிக்கை" என்ற உணர்ச்சிப்பூர்வமான முழக்கத்துடன் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாணவ அமைப்புகள், இளைஞர் இயக்கங்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் தங்களோடு இணைந்து ஒரே நேர்க்கோட்டில் போராடுமாறு கரப்பான்பூச்சி கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் இன்று ஒரு நாள் அமைதி வழியிலான அறப்போராட்டங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
