இனி கல்லூரிகளில் சீருடை கட்டாயம்... ஆளுநர் அதிரடி உத்தரவு!

 
சீருடை சீருடை

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனி சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அம்மாநில ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவமான சூழ்நிலையை உருவாக்கவும் இந்த புதிய ஆடைக்கட்டுப்பாட்டு விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி உத்தரப்பிரதேசத்தில் உள்ள சில குறிப்பிட்ட மகளிர் கல்லூரிகள் மற்றும் சுயநிதிப் படிப்புகளில் மட்டுமே சீருடைப் பழக்கம் அமலில் உள்ள நிலையில், பெரும்பாலான அரசுப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த சாதாரண ஆடைகளையே அணிந்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்பப் பிரத்யேக நிறம் மற்றும் வடிவமைப்புகளில் சீருடைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இந்த புதிய அறிவிப்பை அம்மாநில நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா வரவேற்றுள்ளதுடன், இது மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மாணவர்களின் ஒழுக்கம் மட்டுமன்றி, பெண் கல்வி மற்றும் அவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாகப் மாணவிகள் தங்களின் சொந்தக் காலில் நிற்பதற்கு வசதியாக அழகு கலைப் பயிற்சி, மெஹந்தி கலை, ஜிஎஸ்டி மற்றும் கணக்குப்பதிவியல், சிறுதானிய உணவுத் தயாரிப்பு போன்ற குறுகிய காலத் தொழில் சார்ந்த படிப்புகளைக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தரவிட்டுள்ளார். மேலும், பேராசிரியர்கள் தங்களின் கற்பித்தல் பணியைச் செம்மையாகச் செய்ய வேண்டும் என்றும், வகுப்புகளுக்குச் சரியான நேரத்திற்கு வருகை தந்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.