"திருமணமாகாத இளைஞர்கள் மது குடித்தால் ரூ.5,000 அபராதம்”... நாகை கிராமத்தில் ஊர் கட்டுப்பாடு!
நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி மீனவ கிராமத்தில் "மதுவை ஒழிப்போம்! மக்களைக் காப்போம்!" என்ற முழக்கத்துடன், ஊர் பஞ்சாயத்து சார்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பேனர் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் மற்றும் பொதுச் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்துவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும் எனக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ பிரச்சனை செய்து பஞ்சாயத்துக்கு வந்தால் அவர்களுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் எனக் குறிப்பிட்டுள்ள கிராம பஞ்சாயத்தினர், மதுவைத் தவிர்த்து எதிர்கால வாழ்க்கையையும் சமூகத்தையும் பாதுகாக்க ஊர் பொதுமக்கள் அனைவரும் இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
