இன்று நள்ளிரவு வரை அவகாசம்... KCET தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த இன்றே கடைசி தேதி!
கர்நாடகா தேர்வு ஆணையம் (KEA) நடத்தும் பொது நுழைவுத் தேர்வுக்கான (KCET 2026) விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த இன்று இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பொறியியல், விவசாயம் மற்றும் மருந்தியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கான KCET 2026 நுழைவுத் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள், தங்கள் கட்டணத்தைச் செலுத்தத் தவறியிருந்தால், அதைச் சரிசெய்ய இன்று ஒரு முக்கிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 27ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்திருந்தும், தொழில்நுட்பக் காரணங்களால் அல்லது பிற சூழல்களால் கட்டணம் செலுத்தாதவர்கள் மட்டுமே இன்று இதைப் பயன்படுத்த முடியும். புதிய மாணவர்கள் இன்று புதிதாகப் பதிவு செய்ய இயலாது. ஏற்கனவே நிலுவையில் உள்ள கட்டணங்களை மட்டுமே செலுத்த முடியும்.
இன்று மார்ச் 7ம் தேதி நள்ளிரவு 11:59 மணி வரை ஆன்லைன் வாயிலாகக் கட்டணத்தைச் செலுத்தலாம். மாணவர்கள் கர்நாடகா தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான kea.kar.nic.in பக்கத்திற்குச் சென்று தங்கள் லாகின் விபரங்களைப் பயன்படுத்திப் பணத்தைச் செலுத்தலாம்.

நெட் பேங்கிங், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தும்போது, இணைய வேகம் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். கட்டணம் செலுத்திய பிறகு வரும் 'Payment Success' செய்தியைத் தரவிறக்கம் செய்து அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம்.
இன்று நள்ளிரவுக்குள் கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் முழுமையற்றதாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படும். இதனால் அத்தகைய மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறவோ, தேர்வெழுதவோ முடியாது. கர்நாடகா தேர்வு ஆணையத்தின் இந்த அறிவிப்பு, கடைசி நேரத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
