விபத்துக்குள்ளான காரின் கண்ணாடியைத் துப்பாக்கியால் உடைத்து 5 பேரை மீட்ட காவலரின் துணிச்சல் - உ.பி.யில் நெகிழ்ச்சி!

 
காரின் கண்ணாடி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த காரில் சிக்கிய 5 பேரை, அவ்வழியாகச் சென்ற காவலர் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் கண்ணாடியை உடைத்து மீட்டுள்ள சம்பவம் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் உள்ள ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

உத்தரப் பிரதேசம்:

அந்த வழியாகத் தனது சொந்த வாகனத்தில் சென்ற காவலர் அமித் தேவாட்டியா மற்றும் அவரது மனைவியும் பெண் காவலருமான அர்ச்சனா சிங் ஆகியோர் உடனடியாகத் தங்கள் வாகனத்தை நிறுத்தி மீட்புப் பணியில் இறங்கினர்.

விபத்தின் தாக்கத்தால் காரின் கதவுகளைத் திறக்க முடியாதவாறு கதவுகள் ஜாம் ஆகின. இதனால் உள்ளே இருந்தவர்களை உடனடியாக மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. உடனே துரிதமாகச் செயல்பட்ட காவலர் அமித், தனது சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி காரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தார்.

உத்தரப் பிரதேசம்:

கண்ணாடிகளை உடைத்த பிறகு, காருக்குள் சிக்கியிருந்த 5 பேரையும் அவர் பத்திரமாக வெளியே மீட்டு உயிரைக் காப்பாற்றினார். சரியான நேரத்தில் காவலர்கள் காட்டிய துணிச்சலும் உடனடி நடவடிக்கையும் அங்கு பெரும் விபத்தில் இருந்து உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.