காதலனுடன் சேர்த்து வைங்க... செல்போன் டவரில் ஏறி இளம்பெண் போராட்டம்... வைரல் வீடியோ!

 
செல்போன்

 

உத்தரப்பிரதேசம்: காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய 18 வயது இளம்பெண், இறுதியில் தனது காதலரை வீடியோ அழைப்பு மூலம் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பக்ரைச் பகுதியைச் சேர்ந்த சைதா, அதே கிராமத்தைச் சேர்ந்த நூருதீன் (21) என்பவரைக் காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சைதா, கிராமத்தில் இருந்த உயரமான செல்போன் கோபுரத்தில் ஏறி, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும் வரை கீழே இறங்க மாட்டேன் எனக் கூறினார்.

தகவலறிந்து வந்த போலீசாரும் கிராம மக்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு குடும்பத்தினரும் சம்மதித்ததாகவும், மும்பையில் இருந்த நூருதீனுடன் வீடியோ அழைப்பு மூலம் தொடர்புகொண்டு, மதகுரு முன்னிலையில் திருமணச் சடங்குகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் நான்கு மணி நேரத்துக்குப் பிறகு சைதா கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.