பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்க யோகி அரசு திட்டம் - உ.பி. அரசியல் களம் பரபரப்பு!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
வறுமைக் கோட்டிற்குப் கீழ் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.50,000 வரை நிதியுதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தொகையில் முதல் தவணையாக ரூ.20,000 நேரடியாக வங்கிக் கணக்கில் தேர்தலுக்கு முன்பாக வழங்கப்படலாம் என்றும், மீதமுள்ள ரூ.30,000 தொகையை தலா ரூ.10,000 என மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பணமாக நேரடியாக அளிப்பது தவிர, பெண்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் போன்ற ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நலத்திட்டங்களை விரிவுபடுத்தி இதன் மூலம் நிதியுதவியைச் சென்றடைய வைப்பது குறித்தும் நிபுணர்களுடன் அரசு ஆலோசித்து வருகிறது.

பாஜக அரசின் இந்தத் திட்ட அறிவிப்பு குறித்த தகவல்களை விமர்சித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தபோது வழங்காத பாஜக, தேர்தலை மனதில் வைத்தே இந்த 'ஜும்லா' (தேர்தல் வாக்குறுதி) திட்டத்தைப் பேசுகிறது" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படும் என்றும் அவர் போட்டி வாக்குறுதி அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மகளிருக்கான நிதியுதவித் திட்டங்கள் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்த நிலையில், உத்தரப் பிரதேசத்திலும் பெண் வாக்காளர்களை முதன்மைப்படுத்தி பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளிடையே பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ளது.
