UPI-க்கு புதிய கட்டணம்? ₹2,000-க்கு மேல் என்ன நடக்கும்? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!

 
யுபிஐ

 

UPI மூலம் பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ₹2,000-க்கு மேல் செய்யப்படும் குறிப்பிட்ட வணிகர் UPI பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate (MDR) விதிக்கும் மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்த புதிய கட்டண நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி (RBI), NPCI உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட வணிகர் UPI பரிவர்த்தனைகளில் ₹2,000-க்கு மேல் செலுத்தப்படும் தொகைக்கு 0.4 சதவீத MDR விதிக்கப்படும். ₹75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் அதிகபட்சமாக ₹300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த MDR என்பது வாடிக்கையாளரிடம் நேரடியாக வசூலிக்கப்படும் கட்டணம் அல்ல; பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வணிகர் மற்றும் கட்டணச் சேவை அமைப்புகளுக்கு இடையிலான கட்டணமாக மத்திய அரசு விளக்கியுள்ளது.

அதே நேரத்தில், தனிநபரிடம் இருந்து மற்றொரு தனிநபருக்கு செய்யப்படும் UPI பணப்பரிமாற்றங்களுக்கு இந்த MDR பொருந்தாது. ₹2,000 வரையிலான வணிகர் பரிவர்த்தனைகளும் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும். UPI மூலம் மாதம் ₹1 லட்சம் வரை பெறும் தகுதியுள்ள சிறு வணிகர்களுக்கும் Zero-MDR நடைமுறை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 96 சதவீத வணிகர் UPI பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது என அரசு கூறியுள்ளது.

Supreme Court Refuses Stay on UPI MDR Framework for High-Value Transactions | Mathrubhumi English

ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய இடுபொருட்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அத்தியாவசிய துறைகளில் ₹2,000-க்கு மேல் செய்யப்படும் தகுதியான பரிவர்த்தனைகளுக்கு ₹5 என்ற நிர்ணயிக்கப்பட்ட MDR இருக்கும். மூலதனச் சந்தை தொடர்பான சில பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீத MDR என தனி விகிதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டமைப்பு அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையில், வழக்கில் இடைக்காலத் தடை கோரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் தற்போது அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. மத்திய அரசு உள்ளிட்ட தரப்புகளின் பதில்கள் கிடைத்த பிறகு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.