செம... இனி இன்டர்நெட் இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்!

 
upi

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கோலோச்சி வரும் நிலையில் தொலைதூரப் பகுதிகள் மற்றும் சிக்னல் கிடைக்காத இடங்களில் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தச் சிக்கலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய அதிநவீன தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத கிராமப்புறங்கள் மற்றும் காட்டுப் பகுதிகளிலும் யுபிஐ மூலம் தடையின்றிப் பணம் செலுத்தும் வசதி வரவுள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் பயன்படுத்தப்படும் 'NFC' தொழில்நுட்பத்தை இனி யுபிஐ சேவையிலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசியப் பண வழங்கீட்டுக் கழகம் எடுக்கவுள்ள இந்த முடிவால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அடுத்த கட்டத்திற்குச் செல்லவுள்ளது.

யுபிஐ

மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்கள், சுரங்கப்பாதைகளில் இயங்கும் மெட்ரோ நிலையங்கள் மற்றும் விமானப் பயணங்களின் போது இணைய இணைப்பு கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பொருட்களுக்குப் பணம் செலுத்த முடியாமல் தவிப்பது நாள்தோறும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்தச் சங்கடமான சூழ்நிலைக்குத் தீர்வுகாணும் விதமாக இந்த புதிய தொழில்நுட்ப முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிஓஎஸ் இயந்திரங்களில் இன்டர்நெட் இல்லாமலேயே உங்களது கைபேசியைப் பயன்படுத்திப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். சிக்னல் கிடைக்காத இடங்களில் பணமின்றித் தவிக்க வேண்டிய கட்டாயம் இனி பொதுமக்களுக்கு இருக்காது எனக் கூறப்படுகிறது.

யுபிஐ

புதிய திட்டத்தின் தொடக்கக் கட்டத்தில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளன. அதன்படி இணையம் இல்லாமல் ஒருமுறைக்கு அதிகபட்சமாக ரூ.2,000 வரை மட்டுமே பணம் செலுத்த அனுமதி வழங்கப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள இந்த அசத்தல் வசதி பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால் நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வரலாற்றில் இது ஒரு புதிய திருப்புமுனையாக அமையும். பொதுமக்களின் அன்றாடப் பணப் பரிமாற்றங்களை மேலும் விரைவாகவும் வசதியாகவும் மாற்ற இந்த அதிரடி நடவடிக்கை பெரிதும் பயன்படும்.