தவெக, திமுக உள்ளிட்ட 13 கட்சிகளுக்கு அவசர அழைப்பு... நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்!​​

 
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் நவம்பர் 12 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரை படிவம் 6, 7 மற்றும் 8-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம். இவற்றை இணையதளம் மற்றும் 'ECINET' செயலி வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம்.

அர்ச்சனா பட்நாயக்

விண்ணப்பங்கள் மீதான தீர்வுகள் டிசம்பர் 28-க்குள் முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புத் திருத்தக் கால அட்டவணை, சட்டப்பூர்வ விதிமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக, நாளை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அர்ச்சனா

இக்கூட்டத்தில் பங்கேற்கத் தவெக, திமுக, அதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் சூழலில், தமிழகத்தில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்திற்கு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.