இந்திய மருந்துகளுக்கு அமெரிக்காவில் 100% சுங்கவரி விலக்கு!
அமெரிக்கா குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீத சுங்கவரியை அமல்படுத்தியுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில சிறப்பு மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு 0 சதவீத கூடுதல் சுங்கவரி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், அமெரிக்காவில் மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு 100 சதவீத சுங்கவரி விதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த சுங்கவரி சில நிறுவனங்களுக்கு ஜூலை 31-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், மற்ற நிறுவனங்களுக்கு செப்டம்பர் 29 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சிறப்பு மருந்துகளுக்கு இந்த 100 சதவீத சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரிய நோய்களுக்கான மருந்துகள், கருவுறுதல் சிகிச்சைக்கான மருந்துகள், நியூக்ளியர் மெடிசின், பிளாஸ்மா அடிப்படையிலான சிகிச்சைகள், செல் மற்றும் ஜீன் தெரபி மருந்துகள், ஆன்டிபாடி-டிரக் கான்ஜுகேட்கள் உள்ளிட்டவை விலக்கு பெறுகின்றன. கால்நடை மருந்துகளுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

இந்த மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சில தொடர்புடைய மூலப்பொருட்களுக்கும் 0 சதவீத கூடுதல் சுங்கவரி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த குறிப்பிட்ட வகை மருந்துகளுக்கு உடனடி கூடுதல் சுங்கவரி பாதிப்பு இருக்காது.
எனினும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 100 சதவீத சுங்கவரி விலக்கு கிடைத்துவிட்டது என்று கூற முடியாது. குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற மருந்துகள் இந்த சுங்கவரி விதிகளுக்கு உட்பட்டுள்ளன.அமெரிக்காவின் புதிய சுங்கவரி நடவடிக்கை இந்திய மருந்துத் துறையில் முக்கிய கவனத்தை பெற்றுள்ள நிலையில், எந்தெந்த மருந்துகள் விலக்கு பட்டியலில் உள்ளன என்பது இந்திய மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு முக்கியமானதாக உள்ளது.
