ரவுடி 'கோல்டி பிரார்' குறித்த தகவலளித்தால் ரூ.9.6 கோடி பரிசு - அமெரிக்கா அறிவிப்பு!

 
ரவுடி கோல்டி பிரார்  அமெரிக்கா

இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரவுடியும், சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியுமான கோல்டி பிரார் குறித்த துல்லியமான தகவல்களை வழங்குவோருக்கு ரூ.9.6 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்காவின் எப்.பி.ஐ. (FBI) அமைப்பு அறிவித்துள்ளது.

தேடப்படும் குற்றவாளியான சதிந்தர்ஜீத் சிங் என்கிற 'கோல்டி பிரார்' பற்றித் தகவல் தெரிவிப்போருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.6 கோடி வெகுமதி அளிக்கப்படும் என எப்.பி.ஐ. அறிவித்துள்ளது.

எப்.பி.ஐ. அமைப்பின் '10 மிக முக்கியத் தேடப்படும் குற்றவாளிகள்' பட்டியலில் கோல்டி பிரார் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தியாவில் இயங்கும் பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் குற்றக் கும்பலின் அமெரிக்க மற்றும் வட பிராந்தியத் தலைவராக இவர் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கக்கூடும் என்பதால் இவர் மிகவும் ஆபத்தானவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தைச் சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த கோல்டி பிராரின் தந்தை காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மாணவர் அரசியலில் ஈடுபட்டபோது லாரன்ஸ் பிஷ்னோய்யுடன் ஏற்பட்ட நட்பு, அவரை சர்வதேச அளவிலான குற்ற உலகிற்கு அழைத்துச் சென்றுள்ளது.