ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் - ஈரான் கடும் எச்சரிக்கை!

 
ஹார்முஸ் கப்பல் வணிக ஈரான்

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையேயான ராணுவ மோதல் நீடித்து வரும் நிலையில், வளைகுடா பகுதியில் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி-இறக்குமதி தளமாக விளங்கும் கார்க் தீவு அருகே பெர்ஷியன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது அடுத்தடுத்து 4 ஏவுகணைகள் வீசப்பட்டு முற்றிலும் நாசமாக்கப்பட்டது. எனினும், கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதைப் போல ஜாஸ்க் அருகே மற்றொரு கப்பலும், ஓமன் வளைகுடாவில் காலியாகச் சென்ற மற்றொரு கப்பலும் ஏவுகணை வீசித் தகர்க்கப்பட்டுள்ளன. இதில் முதல் இரண்டு கப்பல்களும் எண்ணெய் ஏற்றிச் சென்றவை ஆகும்.

ஹார்முஸ் ஈரான் கப்பல்

மத்திய கிழக்கில் ரோந்துப் பணியில் இருக்கும் அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க்கப்பல் மற்றும் நாசகாரி கப்பல் ஆகியவற்றை ஈரான் படைகள் குறி வைத்ததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எண்ணெய் கப்பல்கள் ஈரானின் புரட்சிகர ராணுவத்திற்கு நிதியுதவி செய்யும் நிழல் அமைப்பின் அங்கமாகச் செயல்பட்டதாகவும், தொடர்ந்தால் ஈரான் கப்பல் அணியை முற்றிலும் அழித்துவிடுவோம் என்றும் அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்தியுள்ள இந்தத் தாக்குதலுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறுகையில், "தாக்குதலுக்கு ஏற்ற பதிலடி என்ற நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டது; போரின் விதிகள் மாறிவிட்டன" என்று தெரிவித்தார். மேலும், ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால், இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான மற்றும் அதிக வலியை ஏற்படுத்தும் வகையில் முன்பைவிட வேகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்காவை ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி

இந்த மோதல்களால் உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்து வருவதுடன், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் எரிபொருள் விலையில் இதன் தாக்கம் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.