அமெரிக்கா F-1 விசா விதிகளில் திடீர் மாற்றம்.. இந்திய மாணவர்களுக்கு பின்னடைவு; சலுகைகள் குறைப்பு!

 
நியூசிலாந்து விசா

அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களுக்கான விசா விதிகளில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, தாய்நாடு அல்லது பிற நாடுகளுக்கு விடுமுறையில் சென்றுள்ள மாணவர்கள் வரும் செப்டம்பர் 15, 2026-க்குள் அமெரிக்காவிற்குத் திரும்பத் தவறினால், பழைய விசா சலுகைகளை இழக்க நேரிடும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதுவரை அமலில் இருந்த நடைமுறைப்படி, F-1 விசா மூலம் அமெரிக்காவிற்குச் செல்லும் மாணவர்கள் 'டியூரேஷன் ஆஃப் ஸ்டேட்டஸ்' எனும் சலுகையின் கீழ், தங்களது படிப்பு காலம் முடியும் வரை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் தங்கியிருக்க முடிந்தது.

விசா சுற்றுலா விமானம்

புதிய விதிகளின்படி, இந்த பழைய முறை ரத்து செய்யப்பட்டு நிலையான காலக்கெடு அறிமுகப்படுத்தப்படுகிறது. இனி F-1 விசா பெறும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.

மருத்துவப் படிப்பு அல்லது முனைவர் பட்டம் போன்ற 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள், 4 ஆண்டுகள் முடிந்தவுடன் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளிடம் தனியாக விண்ணப்பித்து அனுமதி நீட்டிப்பு பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து விசா

படிப்பு அல்லது பயிற்சி முடிந்த பிறகு, மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்காக அல்லது வேறு விசா பிரிவுகளுக்குமாறுவதற்காக வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகை அவகாசம், தற்போது 30 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழையும் மாணவர்கள் புதிய 4 ஆண்டு கால வரம்பிற்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இதனால், தற்போது இந்தியாவில் விடுமுறையில் உள்ள மாணவர்கள், வகுப்புகள் தொடங்குவதற்கும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கும் முன்பாகவே அமெரிக்காவிற்குத் திரும்புமாறு கொலம்பியா உள்ளிட்ட பல முன்னணிப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்குப் பரிந்துரைத்துள்ளன.