மீதமான உணவை பார்சல் செய்ய ரூ.560 கட்டணமா? அமெரிக்க உணவகத்தின் ரசீதால் சர்ச்சை!
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணம் சார்லட் நகரில் உள்ள ‘STATS’ உணவகத்தில், சாப்பிட்டு மீதமான உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாடிக்கையாளரிடம் கூடுதலாக 6 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.560) வசூலிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்தில் உணவருந்திய வாடிக்கையாளர், மீதமான உணவை பார்சல் செய்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது அதற்காக 6 டாலர் கட்டணம் ரசீதில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், ரசீதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதையடுத்து இந்தக் கட்டணம் தொடர்பாக இணையத்தில் விவாதம் எழுந்தது.
இதற்குப் பதிலளித்த உணவக நிர்வாகம், புதன்கிழமைகளில் வழங்கப்படும் பாதி விலை பாஸ்தா சலுகையுடன் தொடர்புடையதே அந்தக் கட்டணம் என விளக்கமளித்துள்ளது. சலுகை விலையில் வழங்கப்படும் உணவின் மீதியை எடுத்துச் செல்லும்போது, தள்ளுபடியைச் சரிசெய்யும் வகையில் கட்டணம் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.மீதமான உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரம், வாடிக்கையாளர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
