80-வது சுதந்திர தினம்: இந்தியாவிற்கு அமெரிக்க அரசு நெஞ்சார்ந்த வாழ்த்து!

 
ட்ரம்ப் மோடி

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பில் அதிகாரப்பூர்வ வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது மிகவும் வலுவாகவும் ஆழமாகவும் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, தொழில்நுட்பம், தூய்மை எரிசக்தி மற்றும் முக்கியக் கனிமங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வரும் ஒத்துழைப்புகள் இருதரப்புப் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி ட்ரம்ப்

140 கோடி இந்திய மக்களின் ஆற்றல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திறன்களின் மூலமாக இந்தியா அடைந்து வரும் அபாரப் பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா வெகுவாகப் பாராட்டியுள்ளது.

ஜனநாயக மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்த இருதரப்புக் கூட்டாண்மை, உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்காக வரும் காலங்களிலும் மேலும் வலுவடையும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.