24 மணி நேரம் மண்ணுக்குள் ... உயிருடன் 11 மாதக் குழந்தையைப் புதைத்த தந்தை !
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில், 11 மாத ஆண் குழந்தையை நாய்களுக்கான கூண்டுக்குள் வைத்து மண்ணில் புதைத்ததாகக் கூறப்படும் தந்தை மைக்கேல் காமர் (25) கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவா ஷார்ப் என்ற அந்தக் குழந்தை, தாயார் வெளியே சென்றிருந்தபோது தந்தையின் பராமரிப்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வரவிருந்த பராமரிப்பாளர் வீட்டுக்கு வந்தபோது, தந்தையும் குழந்தையும் அங்கு இல்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணி தொடங்கியது.
இதற்கிடையே, குழந்தையின் தந்தை மைக்கேல் காமர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். ஆனால் குழந்தை அவரிடம் இல்லை. தொடர்ந்து சுமார் 100 போலீசார் மற்றும் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மைக்கேலின் தந்தை வசிக்கும் வீட்டுக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் புதிதாகத் தோண்டப்பட்ட மண் பகுதியைக் கண்டறிந்தனர். அங்கு தோண்டிப் பார்த்தபோது, துண்டால் சுற்றப்பட்ட நாய்களுக்கான கூண்டுக்குள் குழந்தை உயிருடன் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தந்தை மீது முதற்கட்டமாக வீட்டில் அத்துமீறி நுழைதல், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தையைப் புதைத்த சம்பவம் தொடர்பாக கூடுதல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
