அதிபர் ட்ரம்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் - அமெரிக்க படைகளை திரும்ப பெற கூட்டு தீர்மானம்!

 
ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஆயுதப் படைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், நாடாளுமன்ற அனுமதியின்றிப் போரைத் தொடர்வதைத் தடுக்கும் வகையிலும் அமெரிக்கச் செனட் சபையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதிபர் டொனால்ட் டிரம்பின் போர்க்கால அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கை சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் அவையான பிரதிநிதிகள் சபையில் ஏற்கனவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று மேல் அவையான செனட் சபையிலும் இது வாக்கெடுப்பிற்கு வந்தது.

செனட் சபையில் இந்த ஈரான் போர் அதிகாரக் கட்டுப்பாட்டுத் தீர்மானம் 50-க்கு 48 என்ற வாக்குகள் கணக்கில் குறுகிய வித்தியாசத்தில் வெற்றிகரமாக நிறைவேறியது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சூசன் காலின்ஸ், பில் காசிடி, லிசா முர்கோவ்ஸ்கி, ரேண்ட் பால் ஆகிய 4 முக்கிய செனட்டர்களும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது அதிபர் டிரம்பிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதால், இதற்கு அதிபர் டிரம்பின் ஒப்புதலோ அல்லது கையொப்பமோ தேவையில்லை என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைந்து நிறைவேற்றும் இத்தகைய கூட்டுத் தீர்மானங்கள், நிர்வாகத்தின் மீதான நாடாளுமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டையும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் வலிமை கொண்டவை ஆகும்.

ட்ரம்ப்

இந்தத் தீர்மானம் குறித்துப் பேசியுள்ள ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் சக் ஷுமர், "தேவையற்ற மற்றும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வரும் இந்த ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர நாடாளுமன்றம் உறுதியான முடிவை எடுத்துள்ளது. போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்பதை இந்தத் தீர்மானம் டிரம்ப் நிர்வாகத்திற்கு உணர்த்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே  தற்காலிகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதி உடன்படிக்கைக்கான முயற்சிகள் நடந்து வரும் சூழலில், நாடாளுமன்றம் எடுத்துள்ள இந்த  முடிவு அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையாக இராணுவப் படைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.