ஆர்எஸ்எஸ் மீது அமெரிக்காவில் பொருளாதாரத் தடை... மோகன் பகவத் பயணத்திற்கு முன் சர்ச்சை!

 
ஆர்எஸ்எஸ் மோகன் பகவத்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் நியூயார்க்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள நிலையில், அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் ஆர்எஸ்எஸ் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவர் ஆசிப் மஹ்மூத் மற்றும் ஆணையர் ஜீன் மில்ஸ் ஆகியோர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைஅமெரிக்க அரசு விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினராக உள்ள நிலையில், அதன் கீழ் செயல்படும் சில துணை அமைப்புகள் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்திய சமூகத்தை ஒன்றிணைத்துள்ளது... ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்  !

ஆகஸ்ட் 29 அன்று நியூயார்க்கில் நடைபெறவுள்ள 'உலகளாவிய ஒற்றுமை கொண்டாட்டங்கள்' நிகழ்ச்சியில் பங்கேற்க மோகன் பகவத் செல்லவுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு எவ்வித உயர்நிலைச் சந்திப்புகளையோ அல்லது இராஜதந்திரப் பணிவன்புகளையோ அமெரிக்க அரசு வழங்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

USCIRF என்பது அமெரிக்கக் கூட்டாட்சி அரசின் ஒரு தன்னாட்சி பெற்ற ஆலோசனைக் குழுவாகும். இதன் பரிந்துரைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டது. அமெரிக்காவில் இயங்கும் 'HinduPACT' உள்ளிட்ட இந்து அமைப்புகள் USCIRF-ன் இந்தக் கூற்றுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மதச் சுதந்திரத்தின் பெயரில் அரசியல் உள்நோக்கத்துடன் உண்மைக்குப்புறம்பான கருத்துகளைப் பரப்புவதாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல தசாப்த காலச் சமூக சேவைகளைப் புறக்கணிப்பதாகவும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.

மோகன் பகவத்

முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் USCIRF வெளியிடும் இதுபோன்ற அறிக்கைகள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் தவறான தகவல்களைக் கொண்டவை என முற்றிலுமாக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.