இந்தியாவுக்குப் பேரிடி: அமெரிக்காவில் இறக்குமதியாகும் மருந்துகளுக்கு 200% வரி விதித்து ட்ரம்ப் அதிரடி!

 
அமெரிக்கா இந்தியா இறக்குமதி

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மருந்துகளுக்கு 200 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது சர்வதேச அளவிலும், குறிப்பாக இந்திய மருந்துத் துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் மலிவு விலையிலான ஜெனரிக் மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மொத்த ஜெனரிக் மருந்துகளின் தேவையில் சுமார் 47 சதவீதத்தை இந்தியா மட்டுமே பூர்த்தி செய்கிறது. அதாவது அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 3 மாத்திரைகளில் 1 மாத்திரை இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

மாத்திரை மருந்து

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மருந்து உற்பத்திச் செலவு 70 சதவீதம் வரை குறைவு. இதனால் இந்திய மருந்து நிறுவனங்கள் தங்களின் மொத்த வருவாயில் சுமார் 40 சதவீதம் வரை அமெரிக்கச் சந்தை மூலமே ஈட்டுகின்றன. உள்நாட்டிலேயே மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாடுகளைச் சார்ந்திருப்பத்தைக் குறைக்கவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய காலக்கெடுவுடன் கூடிய வரி திட்டத்தை அறிவித்துள்ளார்:

2026 ஆகஸ்ட் 1 முதல் 2028 வரை மருந்து இறக்குமதிக்கான வரி பூஜ்ஜியமாக (0%) இருக்கும். 2028 - 2029 (ஓராண்டு காலம்) இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி விதிக்கப்படும். 2029 ஆகஸ்ட் முதல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 200% வரி முழுமையாக அமலுக்கு வரும்.

மாத்திரை மருந்து

"அமெரிக்காவில் சொந்தமாக உற்பத்தி ஆலைகளை அமைக்காத மருந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் நோக்கிலேயே இந்த வரி உயர்வு கொண்டு வரப்படுகிறது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தையும் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பையும் மேம்படுத்தும்" என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு இந்திய மருந்து ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அதேவேளையில், இந்த வரி உயர்வால் அமெரிக்காவில் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் பல மடங்கு உயரக்கூடும் அல்லது அமெரிக்காவில் கடுமையான மருந்துப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.