அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஈரான் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம் - அதிபர் ட்ரம்பிற்கு விழுந்தது பலத்த அடி!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் ஈரான் மீது போர் தொடுத்துச் சட்டத்தை மீறியதாக, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் போர் நிறுத்தத் தீர்மானம் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகப் போர் நீடித்து வரும் சூழலில், உள்நாட்டிலேயே அதிபர் டிரம்பின் போர் உத்திகளுக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்கச் சட்டப்படி 90 நாட்களுக்கு மேல் நாடாளுமன்ற ஒப்புதல் இன்றிப் போரைத் தொடர முடியாது என்ற '1973 போர்க்கால அதிகாரச் சட்டத்தின்'  கீழ் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

ட்ரம்ப்

அதிபர் டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பிரதிநிதிகள் சபையிலேயே இத்தீர்மானம் நிறைவேறியுள்ளது தான் தற்போதைய ஹாட் டாபிக். ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மாறி, எதிர்க்கட்சியினருடன் இணைந்து தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம், 215-க்கு 208 என்ற வாக்குகள் கணக்கில் இந்த போர் நிறுத்தத் தீர்மானம் வரலாற்று வெற்றியைப் பெற்றது. இது அதிபர் டிரம்பின் அதிகாரத்திற்கு நாடாளுமன்றம் கொடுத்த அதிரடி செக் ஆகவும், அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகவும் சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.

இந்த தீர்மானம் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு டெல்லி மற்றும் உலக நாடுகளுக்குப் பெரிய செய்தியாக மாறியிருந்தாலும், உடனடியாகப் போர் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில், இந்த தீர்மானம் அடுத்ததாக நாடாளுமன்றத்தின் மேல்சபையான செனட் சபைக்கு (Senate) அனுப்பப்பட வேண்டும். அங்கு குடியரசுக் கட்சியின் முழுமையான கட்டுப்பாடும், அதிபர் டிரம்பிற்கு இருக்கும் சிறப்பு 'வீட்டோ' (Veto Power) அதிகாரமும் குறுக்கே நிற்பதால், நாடாளுமன்றத்தின் இந்த தடை உத்தரவை முறியடித்துத் டிரம்ப் நிர்வாகம் போரைத் தொடரவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

ட்ரம்ப்

இருப்பினும், "ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது, இந்த வார இறுதிக்குள் ஒரு நல்ல முடிவு எட்டப்படலாம்" என்று அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளதும் இங்கு உற்றுநோக்கத்தக்கது.

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்பின் போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இருகட்சித் தீர்மானம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது மற்றும் அதன் பின்னணி என்ன என்பது குறித்த துல்லியமான காட்சித் தொகுப்பை இந்த சர்வதேச செய்தி ஊடகத்தின் வீடியோவில் நீங்கள் விரிவாகக் காணலாம்.