இந்தியா மீது 100% வரி விதிக்கும் மசோதா - அமெரிக்க செனட் சபையில் முதற்கட்ட ஒப்புதல்!

 
ட்ரம்ப் மோடி

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் கூடுதல் இறக்குமதி வரி விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா, அமெரிக்கச் செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் அபார பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது.

அமெரிக்கச் செனட் சபையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவிற்கு ஆதரவாக 86 உறுப்பினர்களும், எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் மசோதாவுக்கான முதல் நடைமுறைச் சவாலை அமெரிக்கச் செனட் வெற்றிகரமாகக் கடந்துள்ளது. மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சி கிரகாம் முன்னெடுத்த இந்த இருகட்சி மசோதாவிற்குப் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இருதரப்பு செனட்டர்களும் ஒருசேர ஆதரவு அளித்துள்ளனர்.

ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் உலகின் முக்கிய 5 நாடுகளின் மீது 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு இச்சட்டம் முழு அதிகாரம் வழங்குகிறது.

ரஷ்யாவிலிருந்து நேரடியாக அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குப் 500 சதவீதம் வரை வரி விதிக்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய எரிபொருள் வருவாயைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஈரானிய அரசாங்கத்தின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 1996-ஆம் ஆண்டின் ஈரான் தடைகள் சட்டத்தை 2031-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கவும் இச்சட்டமுன்வடிவு பரிந்துரைக்கிறது.

இந்த மசோதா பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் ஒப்புதலைப் பெற்று இறுதிச் சட்டமாக வடிவம் பெற்றால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள், மருந்துகள், ரத்தினக் கற்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டப் பொருட்களின் மீதும் கடும் வரிச்சுமை ஏற்படும்.

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரித்திருந்த நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை இருநாடுகளின் வர்த்தக உறவில் பெரும் சவாலை ஏற்படுத்தக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தற்போது விடுமுறையில் உள்ளதால், இச்சட்டம் முழுமையாக அமலுக்கு வர வரும் செப்டம்பர் மாதம் வரை ஆகலாம் எனத் தெரிகிறது.