ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் - 13 பேர் பலி.. அணுசக்தி மையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் இலக்கு!

 
ஈரான் ஈரான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்கள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன.

தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அமெரிக்கா போர் ட்ரம்ப்

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் எரிவாயு விநியோகக் கட்டமைப்புகள் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளன. தெஹ்ரானின் ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள இயற்கை எரிவாயு விநியோகத் தளம் மற்றும் எஸலாம்ஷார் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் செல்லும் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதைத் திறக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்துவிட்டது.

"நாளை ஈரானில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தகர்க்கப்படும் நாளாக இருக்கும். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் நரகத்தை அனுபவிப்பீர்கள்" என டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையாக எச்சரித்துள்ள நிலையில், இன்றிரவு 10.30 மணிக்கு அசம்பாவிதம் நிகழலாம் என்று உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன. 

அமெரிக்கா ஈரான்

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த 'Operation Epic Fury' எனப்படும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஈரானின் உயர் மட்டத் தலைவர்கள் மற்றும் ராணுவத் தளபதிகள் குறிவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய வான்வழித் தாக்குதல்கள் ஈரானைப் பொருளாதார ரீதியாக முடக்க அமெரிக்கா எடுத்துள்ள தீவிர முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த மோதலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எகிப்து, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் 45 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு முயற்சி செய்த போதிலும், இரு நாடுகளும் தங்களது பிடிவாதமான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போர் நிறுத்த வாய்ப்புகள் மங்கியுள்ளன.