மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம்... 3-வது விமானம் தாங்கி போர்க்கப்பலை களமிறக்கும் அமெரிக்கா!

 
அமெரிக்கா

மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா கூடுதலாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் குழுவை அந்தப் பகுதிக்கு அனுப்புகிறது.அமெரிக்காவின் USS Theodore Roosevelt விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் அதனுடன் இணைந்த போர்க்கப்பல் குழு மத்திய கிழக்கு நோக்கி புறப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் ஏற்கனவே மத்திய கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் USS George H.W. Bush மற்றும் USS George Washington ஆகிய விமானம் தாங்கி போர்க்கப்பல் குழுக்களுடன் சேர்த்து, அமெரிக்காவிடம் அப்பகுதியில் 3 விமானம் தாங்கி போர்க்கப்பல் குழுக்கள் இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய ராணுவ நடவடிக்கையுடன் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களும் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் தாங்கி போர்க்கப்பல் குழு மற்றும் கடற்படையினர், கடற்படை வீரர்கள் உள்ளிட்ட கூடுதல் படைகள் மூலம் சுமார் 9,000 முதல் 10,000 வீரர்கள் வரை மத்திய கிழக்கில் குவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், USS Makin Island தலைமையிலான கடற்படை குழுவும் 2,000-க்கும் மேற்பட்ட கடற்படையினருடன் அப்பகுதியை நோக்கி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவப் பிரசன்னம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுடன் நீடித்து வரும் மோதல் தொடர்பாக அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

US sends third aircraft carrier, thousands of troops to Middle East amid Iran tensions

அமெரிக்காவின் புதிய ராணுவ குவிப்பு, ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைக்கான முன்னேற்பாடா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், விமானம் தாங்கி போர்க்கப்பல் அனுப்பப்படுவது மட்டுமே உடனடியாக புதிய தாக்குதல் தொடங்கும் என்பதற்கான உறுதியான அறிவிப்பாக கருத முடியாது.இதனிடையே, மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கூடுதல் ராணுவ நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியான நிலையில், கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்ததாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.