அமெரிக்க உயிரியல் பூங்காவில் தொப்பியை விழுங்கிய நீர்யானை உயிரிழப்பு... அதிர்ச்சி வீடியோ!

 
ஹிப்போ

 

அமெரிக்காவின் சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் பார்வையாளர் தவறவிட்ட தொப்பியை விழுங்கிய 9 வயது நீர்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் 'பியோனா' என்ற நீர்யானை வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு குறைமாதத்தில் பிறந்த இந்த நீர்யானை, உயிர் பிழைப்பதற்காக போராடியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 8-ந்தேதி பூங்காவுக்கு வந்த பார்வையாளர் ஒருவர் தனது பின்னப்பட்ட கம்பளித் தொப்பியை மேலே தூக்கி வீசியுள்ளார். அப்போது அங்கிருந்த மின்விசிறியில் சிக்கிய தொப்பி, நீர்யானை அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் விழுந்தது. இதனை பியோனா விழுங்கியுள்ளது.

11 நாட்கள் தீவிர சிகிச்சை

தொப்பியை விழுங்கிய சில நாட்களுக்குப் பிறகு பியோனாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.

தொப்பி செரிமானப் பாதையில் இருந்து வெளியேறுவதற்காக பல்வேறு மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் பரிசோதனை, கொலோனோஸ்கோபி உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இருப்பினும் தொப்பியை வெளியே எடுக்க முடியவில்லை.முழு வளர்ச்சியடைந்த நீர்யானைக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் ஆபத்தானது என்பதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மருத்துவர்களின் தொடர் முயற்சிகளையும் மீறி, நவம்பர் 19-ந்தேதி பியோனா உயிரிழந்தது. இந்த தகவலை சின்சினாட்டி உயிரியல் பூங்கா நிர்வாகம் வேதனையுடன் அறிவித்தது.

குறைமாதத்தில் பிறந்து உயிருக்கு போராடி மீண்ட பியோனா, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தது. அதன் மறைவு விலங்குகள் நல ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகள் வசிக்கும் பகுதிக்குள் எந்தப் பொருளையும் வீசக்கூடாது என்றும், பார்வையாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.