பயனர்கள் அதிர்ச்சி... உலகம் முழுவதும் 'X' தளம் முடங்கியது!

 
எக்ஸ் ட்விட்டர் முடங்கியது எக்ஸ் ட்விட்டர் முடங்கியது

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான 'எக்ஸ்' தளம் இன்று திடீரென முடங்கியது. இதனால் பல கோடி பயனர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் தவிப்பிற்குள்ளாகினர்.

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்கிற்குச் சொந்தமான 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கம் இன்று மதியம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியது. இந்தியா உட்பட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இந்தத் தடங்கல் உணரப்பட்டது. இன்று மதியம் சுமார் 12:40 மணியளவில் இருந்து எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

எக்ஸ்

பயனர்கள் தங்களது ஃபீட் பக்கத்தைப் புதுப்பிக்க முடியாமலும், புதிய பதிவுகளை இட முடியாமலும் தவித்தனர். லாக்-இன் (Login) செய்வதிலும் பலருக்குச் சிரமம் ஏற்பட்டது. டவுன் டிடெக்டர் தளத்தின் தரவுப்படி, இந்தியாவில் ஆயிரக்கணக்கானோரும், அமெரிக்காவில் 20,000-க்கும் மேற்பட்டோரும் இப்புகாரைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக 50% புகார்கள் ஆப்  தொடர்பானவை என்றும், 40% டைம்லைன் புதுப்பிக்கப்படாமல் இருப்பது தொடர்பானது என்றும் தெரிய வந்துள்ளது.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த முடக்கத்திற்கு எக்ஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எலான் மஸ்க் தரப்பிலிருந்தும் எவ்விதப் பதிலும் வரவில்லை. இது ஒரு சாதாரண சர்வர் கோளாறா அல்லது பெரிய அளவிலான சைபர் தாக்குதலா என்ற கோணத்தில் இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர்.

எக்ஸ் ட்விட்டர் முடங்கியது

2026ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து எக்ஸ் தளம் இதுபோன்று முடங்குவது இது மூன்றாவது முறையாகும். கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் 18 ஆகிய தேதிகளிலும் இதேபோன்ற ஒரு பெரிய முடக்கத்தை இத்தளம் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சேவைகள் மெல்ல மெல்லச் சீராகி வருவதாகப் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.