அமெரிக்கா - ஈரான் மோதல்: கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அபாயத்தால் சந்தை அதிர்ச்சி!

 
கச்சா எண்ணெய்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இராணுவ மோதல்களும் வான்வழித் தாக்குதல்களும் பத்தாவது நாளாகத் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளதால், சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தடைகளால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வு அச்சம் மேலோங்கியுள்ளது. போர்ச் சூழல் காரணமாகக் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் ஒரே நாளில் 3% வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 3.05% உயர்ந்து பேரல் ஒன்றுக்கு $90.79 வரை வர்த்தகமானது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $84.68 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 15.9% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸ் ஜலசந்தி பாரசீக வளைகுடா இந்தியக் கப்பல்

அமெரிக்கா ஈரானியத் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை அறிவித்துள்ள நிலையில், ஈரான் ஹார்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. வழக்கமாக நாளொன்றுக்கு பல பத்து எண்ணெய் டேங்கர்ஸ் கடந்து செல்லும் இந்த வழியில், தாக்குதல்கள் காரணமாக வெறும் 4 கப்பல்கள் மட்டுமே பாதுகாப்புடன் சென்றுள்ளன.

சவுதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதிக்கு மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தும் செங்கடல் வழியிலும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நிலவுவது, சர்வதேசக் கச்சா எண்ணெய் சந்தையை மேலும் நிலைகுலையச் செய்துள்ளது.

ஹார்முஸ்

ஹார்முஸ் நீரிணையில் விநியோகம் சீராகாவிட்டால் உலகளாவிய அளவில் பின்வரும் பாதிப்புகள் ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சில்லறை எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டீசல் விலை உயர்வதால் சரக்கு லாரிகள் மற்றும் கப்பல்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் ஆபத்து உருவாகியுள்ளது. மோதல் நீடித்தால், ஆசிய நாடுகள் உள்ளிட்ட இறக்குமதி நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம்.