அமெரிக்கா - ஈரான் நேரடி மோதல்... ட்ரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு!

 
கச்சா

வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வந்த தற்காலிகப் போர்நிறுத்தம் முழுமையாக முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தற்பொழுது நேரடி ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் மிக முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த மூன்று சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் (ஒரு எல்.என்.ஜி ரகக் கப்பல் மற்றும் ஒரு சூப்பர் டேங்கர் உட்பட) மீது ஈரான் திடீர் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

கச்சா எண்ணெய்

ஈரானின் இந்த அத்துமீறல் மற்றும் போர்நிறுத்த விதிமீறலைக் கண்டித்து, அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் ஈரான் மீதான தனது ராணுவத் தாக்குதலை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலக நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் விநியோகம் முற்றிலுமாகத் தடைபடும் என்ற அச்சம் சர்வதேசச் சந்தைகளில் எழுந்துள்ளது.

இந்த நேரடி ராணுவ மோதலின் எதிரொலியாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரே நாளில் சுமார் 3 சதவீதம் வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நிலவரப்படி பேரல் ஒன்றுக்கு 1.86% உயர்ந்து 75.54 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தகத்தின் இடையே இது அதிகபட்சமாக 76.41 டாலர் வரை சென்றது. பேரல் ஒன்றுக்கு 1.94% உயர்ந்து 71.81 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், இந்தியாவின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான  பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகியவற்றின் பங்குகள் இந்தியப் பங்குச்சந்தையில் இன்று 3.5% முதல் 4% வரை பலத்த சரிவைச் சந்தித்துள்ளன. இந்த ராணுவ மோதல் மேலும் தீவிரமடைந்தால் உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை பன்மடங்கு உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.