தீபாவளி ஸ்வீட்ஸ் வாங்குபவர்களே கவனம்... 1,600 கிலோ போலி பால்கோவா பறிமுதல்... வைரல் வீடியோ!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க உத்தரப் பிரதேசத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஹாபூர் மாவட்டத்தில் 1,600 கிலோ கலப்பட கோவா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
ஹாபூர் மாவட்டம் தவுலானா பகுதியில் உள்ள லால்பூர் கிராமத்தில் கோவா தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, ஸ்கிம்டு பால் பவுடர் மற்றும் வனஸ்பதி கலந்து தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 16 குவிண்டால் கோவா கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நான்கு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பினர். பறிமுதல் செய்யப்பட்ட கோவாவின் மதிப்பு சுமார் ரூ.3.20 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அந்தப் பொருட்கள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.
மேலும், மற்றொரு சோதனையில் சாய் நாத் ஃபுட்ஸ் நிறுவனத்தில் சுமார் 1,750 கிலோ சந்தேகத்துக்குரிய கடலை மாவும் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டது. பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதைத் தடுக்க மாநிலம் முழுவதும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
