ஓடும் பேருந்தில் திடீர் தீ! 9 பேர் உயிரிழப்பு.. உத்தரப் பிரதேசத்தில் பயங்கர சோகம்

 
உபி

 

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா அருகே யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் மஹோபா நோக்கி தனியார் sleeper பேருந்து ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் ஜீவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 33-வது கிலோமீட்டர் அருகே சென்றபோது பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் தீ பரவியதை உடனடியாக கவனிக்க முடியவில்லை.

பின்னர் பேருந்துக்குள் புகை பரவியதை அறிந்த பயணிகள் அலறியடித்தபடி வெளியேற முயன்றனர். சிலர் ஜன்னல்கள் வழியாக குதித்து உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புகைமூட்டம் அதிகமாக இருந்ததால் சிலர் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் குளிர்சாதன அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், பயணிகள் முன்கூட்டியே பேருந்தில் எரியும் வாசனை ஏற்பட்டதாக தெரிவித்தும் பேருந்து நிறுத்தப்படவில்லை என ஒரு பயணி அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்பட்ட FIR-ல் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் போலீசாரால் பிடித்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான முழுமையான காரணம் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.