அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்... வீட்டிற்குள் புகுந்து படமெடுத்த நாகப்பாம்பு - வைரலாகும் வீடியோ

 
snake

உத்தரப் பிரதேசத்தில் வீட்டுக்குள் பெரிய நாகப்பாம்பு புகுந்ததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு அந்த பாம்பு உயிருடன் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள நப்பா நாக்லா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்பு வீட்டுக்குள் நேற்று திடீரென பெரிய நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.

வீட்டில் பாம்பு இருப்பதைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கும் பரவிய நிலையில், ஏராளமான பொதுமக்கள் அந்த வீட்டின் முன்பு திரண்டனர்.

வீட்டுக்குள் இருந்த நாகப்பாம்பு அங்கும் இங்கும் ஊர்ந்து சென்ற நிலையில், சிலர் தங்களது செல்போன்களில் அதை வீடியோ எடுக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உள்ளூர் பாம்பு மீட்புப் பணியாளர் சிந்து என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர், வீட்டின் ஒரு மூலையில் பதுங்கியிருந்த நாகப்பாம்பை நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு பாதுகாப்பாக பிடித்தார்.

மீட்கப்பட்ட நாகப்பாம்பு உயிருடன் இருந்த நிலையில், பின்னர் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினரும், அங்கு திரண்டிருந்த பொதுமக்களும் நிம்மதியடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தால் பொதுமக்கள் தாங்களாகவே அதை பிடிக்க முயற்சி செய்யாமல், வனத்துறை அல்லது பயிற்சி பெற்ற பாம்பு மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனவிலங்கு மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.